செவ்வாய், 21 ஏப்ரல், 2026

22.04.2026

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள்.

வாழ்க்கை எனும் இந்த ஆழியிலே எமக்குத் துன்பமும் வருவதுண்டு.  

இன்பமும் வருவதுண்டு. 

ஆனால் நாம் எமக்கு வரும் துன்பத்திலோ அன்றித் துயரத்திலே எமது கவனம் முழுவதையும் செலுத்துவதனால் எமைச் சுற்றி நடக்கும் இன்பமான நிகழ்வுகளைக் கணக்கெடுக்கத் தவறி விடுகிறோம்.  

நான் படித்த ஒரு சிறு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.  

ஒருநாள் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையினுள் நுழைந்ததுமே  
“இன்று ஒரு பரீட்சை வைக்கப்போகிறேன், ஆயத்தமாகுங்கள்" என்றார்.  

மாணவர்கள் பரபரப்படைந்தார்கள். வினாத்தாளை கவிழ்த்து வைத்தார். 

மாணவர்கள் வினாத்தாளை திருப்பியதும் ஆச்சரியப்பட்டார்கள் அதிலே ஒரு கேள்வியும் இல்லை; மத்தியில் ஒரு கறுப்புப் புள்ளி மட்டுமே இருந்தது.  

மாணவர்களின் மனதில் தோன்றுவதை எழுதும்படி ஆசிரியர் பணித்தார். 

அனைவரும் எழுதியதும் விடைத்தாள்களை வாங்கிப் படித்தார் ஆசிரியர்.  

பின்பு அவர் கூறினார்:  
"நான் அனைவருடைய விடைத்தாள்களையும் படித்தேன்.
     
நீங்கள் அனைவரும் அந்தத் தாளின் மத்தியில் இருந்த கறுப்புப் புள்ளியை மட்டுமே கவனித்துள்ளீர்கள். 

அந்தக் கறுப்புப் புள்ளி அந்தத் தாளில் ஒரு சிறிய பகுதியே. ஆனால் அதைச் சுற்றியிருக்கும் மிகப் பரந்த வெள்ளைப் பகுதியை கவனிக்கத் தவறிவிட்டீர்கள்.  

நம் வாழ்வும் அதுபோலத்தான்  துயரமோ, துன்பமோ அக்கறுப்புப் புள்ளி போல மிகவும் சிறியதே.  

நாம் அனைவரும் அச்சிறிய துயரத்தின் மீதே எமது மனதைச் செலுத்துகிறோம்.

அதனால் எமது வாழ்வில் உள்ள மகிழ்ச்சிகரமான தருணங்களை அனுபவிக்காமல் தவறவிடுகிறோம்."

நம் மனம் எதை நோக்கி செல்கிறது என்பதே நம் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கிறது.  

ஒரு சிறிய காயம் ஏற்பட்டால் உடலின் முழு நலத்தையும் மறந்து அந்தக் காயத்தையே நினைத்து வலியடைவது போல, ஒரு சிறிய துன்பம் வந்தாலே நம் மனம் முழுவதையும் அதற்குள் அடைத்து விடுகிறோம்.  

ஆனால் நம் வாழ்வில் தினமும் நிகழும் சிறிய நன்மைகள், அன்பான வார்த்தைகள், எதிர்பாராத உதவிகள் இவை அனைத்தும் அந்த வெள்ளைப் பகுதியைப் போல நம்மைச் சுற்றியே இருக்கின்றன.

என் இனிய அன்பு உள்ளங்களே!  

துன்பமோ, துயரமோ நிகழத்தான் போகிறது. 

அதன் அளவிற்கு ஏற்ப அது எமது மனதைத் தாக்கத்தான் போகிறது.  

ஆனால் அதை விட்டு வெளியே வர நாம் எமக்கு நடக்கும் அனுகூலமான விடயங்களில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.  

ஒரு நொடி நின்று சுவாசத்தை உணருங்கள்.  

அந்தச் சுவாசமே நமக்கு இன்னும் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்கிறது.  

சிறிய நன்றி உணர்வுகள் கூட மனத்தின் இருளை அகற்றும்.  
நன்றி சொல்லத் தெரிந்த மனம் துன்பத்தை வெல்லும் சக்தியையும் பெறுகிறது.

வாழ்க்கையை நாம் வாழத்தான் வேண்டும்.  

உணர்வுகள் எனும் குதிரைகள் பூட்டிய உடம்பு எனும் இத்தேரில் உட்கார்ந்திருக்கும் சாரதியே நமது புத்தியாகும்.  

இந்த மூன்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவர் இப்பூமி எனும் சாலையிலே வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக ஓட்டிச் செல்வார் என்பது சத்தியமான உண்மையாகும்.

உணர்வுகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

அவற்றை நிறுத்த முடியாது.  

ஆனால் அவற்றை வழிநடத்த முடியும்.  

குதிரை ஓடுவது தவறு அல்ல  கட்டுப்பாடின்றி ஓடுவது தான் ஆபத்து.  

அதேபோல், உணர்வுகள் வருவது தவறு அல்ல அவற்றை நம் புத்தி வழிநடத்த வேண்டும்.

ஓட்டப் பந்தயத்தில் முயலும் வெல்லலாம், அதேபோல் ஆமையும் வெல்லலாம்.  

ஆனால் எம் வாழ்க்கைப் பந்தயத்தில் முயலாமை வெல்லுமா?  

எதையும், எப்போதும், எப்படியும் செய்து முடிக்கலாம் என்பதை இதையாவது இப்போது, இப்படியாவது செய்து முடிப்பதே மேலானது.  

நாளை என்பது எப்போதும் கற்பனையானதே.

இன்று என்பதே நிஜமாக எம்முன்னே நிற்கிறது.  

எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போடும் போது அது கற்பனைக்குத் தள்ளப்படுகிறது.  

நாளை நமக்குச் சொந்தமில்லை.
    
இன்று மட்டுமே நமக்குரியது.  

இன்றைய ஒரு சிறிய முன்னேற்றம் கூட நாளைய பெரிய வெற்றிக்கான விதையாகும்.  

நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய படியும் நம் எதிர்காலத்தை அமைக்கிறது.  

அதனால் இன்று செய்ய வேண்டியது இன்று செய்யப்பட வேண்டும்.

இன்றைய தளத்திற்கு நேற்றைய நிகழ்வுகள் கொடுத்த அனுபவ உரத்தை இட்டாலே நாளைய செழிப்பான வளர்ச்சி உறுதியாகும்.  

திடமான எண்ணம், அமைதியான சாத்வீக நடைமுறை —இதன் வழியில் நாளைய உலகின் வெற்றிக்காக இன்றே செயற்படுங்கள்.  

உங்களால் முடியும்.

அன்பன்  
சக்தி சக்திதாசன்

21.04.2026

அன்பினியோரே !  

இனிய வணக்கம்.

காலில் செருப்பில்லை என்று எண்ணி கவலைப்பட்டுக் கொண்டு நடக்கும்போது எதிரே ஒரு காலிலாத மனிதனைக் கண்டோமானால் எப்படி எம் மனது கொஞ்சம் ஆறுதலடைகிறது?  

ஆமாம், அக்காலிழந்தவனின் துரதிருஷ்டம் எம் மனதுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. 

இதுதான் இயற்கை.  

உலகத்தில் பெரும்பான்மையான மக்களின் மனதின் உணர்வுகள் இவ்வழியே தான் ஓடுகிறது.  

ஒரு மனிதன் எதற்காக ஒரு செயலைச் செய்கிறான் என்பதன் முழு அர்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ளாது மேலோட்டமாக அதைத் தமது திறமைக்குச் சாதமாக்கிக் கொண்டு நடக்கும் சுயநலமிக்கவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உலகமே இது.  

இதற்கு விதிவிலக்காக உங்களில் பலர் இருப்பதை நான் அறிவேன்.  

பெரும்பான்மை என்று குறிப்பிடும்போது ஒட்டுமொத்தமாக அனைவரையுமே குறிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  

சில நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பார்வை நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம்.  

நாம் காட்டும் பொறுமையை அவர்கள் பலவீனமாகவும், நாம் காட்டும் அமைதியை அவர்கள் பயமாகவும் எண்ணலாம்.  

ஆனால் உண்மையில், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன் என்பது பலவீனத்தின் அடையாளமல்ல.

அது உள்ளத்தின் வலிமையின் உச்சக்கட்டம்.  

அந்த வலிமை உள்ளவர்களே உலகை மாற்றும் சக்தி கொண்டவர்கள்.

கவியரசர் கண்ணதாசனின் ஒரு படைப்பில் நான் படித்த ஒரு சிறு செய்தியைக் குறிப்பிடுகிறேன்.  

மிகவும் எளிமையாக சுவைமிகு தமிழில் கவியரசர் கூறியதை இன்னும் சுருக்கி இங்கு கூற விழைகிறேன்.  

ஒரு காட்டு வழியாக ஒரு பெண்யானையும், ஆண்யானையும் நடந்து வந்து கொண்டிருந்தன.  

அப்போது அவைகள் நடக்கும் பாதையின் குறுக்காக ஒரு எறும்புக் கூட்டம் ஊர்ந்து செல்வதைக் கண்ட ஆண்யானை அந்த இடத்திலே அடுத்தொரு அடி எடுக்காமல் நின்று விட்டது.  

அதே போல் பெண்யானையும் நின்று விட்டது, அப்போது பெண்யானை ஆண்யானையைப் பார்த்து "ஏன் நின்று விட்டாய்?" என்று கேட்டது.  

அதற்கு ஆண்யானை "நாம் கவனக்குறைவால் பாவம் அந்த எறும்புகளை மிதித்து விடக்கூடாது என்பதற்காக நின்றேன்" என்றது.  

புன்னகைத்த பெண்யானை தானும் அதே காரணத்திற்காகத்தான் நின்றேன் என்றது.  

அப்போது அவ்வெறும்புக் கூட்டத்தின் தலைவன் மற்ற எறும்புகளைப் பார்த்து "பார்த்தீர்களா எமது பலத்தை?  
எமது கூட்டத்தைக் கண்டதும் அந்த யானைகள் பயந்து நின்று விட்டன" என்று கூறியது.  

அவ்வெறும்புக் கூட்டம் தமது பாதையை விட்டகன்றதும் மன அமைதியுடன் அந்த யானைகள் தமது பயணத்தைத் தொடர்ந்தன.  

இது வாழ்க்கையின் ஒரு பெரிய உண்மையை நமக்கு கற்றுத் தருகிறது.  

நாம் செய்யும் நன்மையை எல்லோரும் நன்மையாகவே புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.  

சிலர் தங்கள் குறுகிய பார்வையால் நமது உயர்ந்த எண்ணங்களையே தவறாகப் புரிந்து கொள்வார்கள்.  

ஆனால் அதனால் நமது நன்மை குறையக்கூடாது; நமது மனம் சுருங்கக்கூடாது.

என் இனிய இளைய தலைமுறையே!  

நீங்கள் அன்பின் நிமித்தம் சில சமயங்களில் இக்கட்டான சூழல்களில் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதை சில பலவீனமானவர்கள் தமது பலமாகவும் உங்களின் கோழைத்தனமாகவும் பார்க்கலாம், ஆனால் உண்மை உங்கள் உள்ளத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.  

அதன் ஒளியில் உங்கள் முன்னேற்றப்பாதை மென்மேலும் தெட்டத்தெளிவாகத் தெரியும்.  

உண்மையான வலிமை என்பது சத்தமாகக் கத்துவதிலும், கோபத்தை வெளிப்படுத்துவதிலும் இல்லை.  

அமைதியாக நிற்கும் திறனிலும், உணர்ச்சியை அடக்கும் திறனிலும் தான்.  

உங்களைத் தூண்டுபவர்களை வெல்ல வேண்டிய அவசியமில்லை;  
உங்கள் உள்ளத்தை வெல்லும் திறன் இருந்தால் உலகமே உங்களுக்கு முன் தலைவணங்கும்.

இதோ நான் சமீபத்தில் படித்த ஒரு சிறு சம்பவக்கதை.  

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.  

அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.  

ஒருநாள் சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர்.  

அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.  

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.  

அவன் மன்னனிடம், “அரசே… உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.  

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது.  

அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள்.  

அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.  

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்துமாலை பரிசு?” என்று கேட்டார்.  

மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான்.  

அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது.  

உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.  

உண்மையான அன்பு எப்போதும் வெளிப்புற வடிவத்தைப் பார்க்காது. 
 
அது உள்ளத்தின் தூய்மையை மட்டுமே உணரும்.  

நாம் கொடுப்பதின் மதிப்பு அதன் விலையிலில்லை.

அதை வழங்கும் மனத்தின் நேர்மையில்தான்.  

அந்த நேர்மை இருந்தால், உலகமே நமக்கு துணையாக நிற்கும்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.  

ஆமாம், உண்மை அன்புக்கு அந்தஸ்து கிடையாது, 

ஆணவம் கிடையாது.  

எனவே துணிவுடன் முன்னேறுங்கள்.  

உங்களால் முடியும்.

அன்பன்  
சக்தி சக்திதாசன்